Thursday, October 8, 2026

இரகசியம் - பரகசியம் (03.12.2023)


நான் சும்மா இருந்தாலும் பிரச்சினைகள் என்னை சும்மா விடுவதாக இல்லை. தேடி வருகின்றன. அவற்றை விட்டு நான் ஒதுங்கி இருக்கலாம் என்றாலும் அவை தள்ளிப் போக எண்ணுவதில்லை.

அப்படியான ஒன்றைப் பற்றித்தான் இன்று எழுதுகின்றேன்.

நேற்றுக் காலை தவற விடப்பட்ட அழைப்பு ஒன்று என் தொலைபேசியில் பதிவாகி இருந்தது. அந்த இலக்கத்துக்கு அழைப்பு எடுத்தேன். தமிழரசுக் கட்சியின் பிரமுகர் அவர். தெரிந்த நண்பர்.

அவர் ஒரு கேள்வி எழுப்பினார். காலையில் என் பத்தியை வாசித்து விட்டுத்தான் அந்தக் கேள்வி கோபத்துடன் அவரிடமிருந்து வந்தது.

''மாவைக்குக் கட்சிக்குள் பெருந்தலைவர் பதவி கொடுப்பது குறித்து யோசிக்கின்றார்கள் என்று எழுதி இருக்கின்றீர்கள் அல்லவா?''

''ஆம். அப்படித்தான் பேச்சு அடிபட்டது. அதைத்தான் எழுதினேன்.'' - என்றேன் நான்.

''பெருந்தலைவர் என்றால் பெரும் மனிதத்தனமாக - கனவான் போல - நடந்து கொள்ள வேண்டும் அல்லவா? சிறுமைத்தனமாக நடப்பவரை எப்படி பெருந்தலைவராக ஏற்பது?'' - என்று அவர் சீறினார்.

ஏதோ விடயம் தூண்டிலில் தேடி வந்து மாட்டுகின்றது என்று எண்ணிக் கொண்டு துருவினேன்.

''இன்று(நேற்று) பிற்பகல் தமிழரசுக் கட்சியின் காங்கேசன்துறைத் தொகுதிக் கிளையின் கூட்டம். தொகுதிக் கிளை சார்பில் தேசிய மாநாட்டில் பங்கு பற்றி வாக்களிக்கவிருக்கும் பிரதிநிதிகள் தெரிவு இன்று. தந்தை செல்வாவின் தொகுதி இது. மூலக்கிளைகளின் பிரதிநிதிகள்தான் தொகுதிக் கிளைக் கூட்டத்தில் பங்குபற்ற வேண்டும். தெல்லிப்பளை மூலக்கிளையின் தலைவர் மற்றும் பிரதிநிதியான சுகிர்தனுக்கு (வலி. வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர்) அழைப்பு அனுப்பாமலேயே வேண்டுமென்றே ஓரம் கட்டி உள்ளார் தொகுதிக் கிளைத் தலைவர் மாவையர். மல்லாகம் மூலக் கிளையின் தலைவர் ஹரிகனுக்கும் அழைப்பு அனுப்பப்படவில்லை. அவரும் அதே பிரதேச சபையில் உறுப்பினராக இரண்டு முறை பதவி வகித்தவர். தமிழரசு கட்சியின் முன்னணி இயங்குநிலை உறுப்பினர். ஓர் ஊடகவியலாளரும் கூட. தமிழரசுக் கட்சியின் மூத்த இயங்கு நிலை உறுப்பினர்கள், பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்கள் எல்லோரையும் வெட்டி விட்டுத் தொகுதிகளைக் கூட்டத்தை கூட்டுகின்றார் உங்களின் பெருந்தலைவர் மாவையர். இரண்டு காரணங்களுக்காக. ஒன்று - வலிகாமம் வடக்கில் தமது மகன் மேலெழுவதற்குக் கட்சிக்குள் தடையாக - இடைஞ்சலாக - உள்ளோரை கட்சிக்குள்ளேயே இடமளிக்காமல், வெட்டி, வெளியேற்றுவது. அடுத்தது - கட்சியின் தேசிய மாநாட்டில் தாம் காட்டுபவர்களுக்கு வாக்களிக்கக் கூடிய நம்பகரமானவர்களை மட்டுமே பிரதிநிதிகளாக தேர்ந்தெடுப்பதற்கு வசதியான சூழ்நிலையை ஏற்படுத்துவது. இந்த இரண்டுக்குமாகத்தான் கட்சியின் மூத்த -.அதிக ஈடுபாடு காட்டிச் செயற்படுகின்ற - உறுப்பினர்களை எல்லாம் வெட்டி விட்டு, நரித்தனமாகக் கூட்டம் நடத்துகின்றார் மாவையர். அவருக்குப் பெருந்தலைவர் பதவி கொடுக்க முனைவோர்கள் உண்மையில் சிறுமைத்தனத்துக்குத் துணை போகின்றார்கள்'' என்றார் அந்த நண்பர்.

அவர் கூறிய தகவல்களை விசாரித்தேன். முற்றிலும் உண்மை.

நேற்று மாலை காங்கேசன்துறைத் தொகுதி கிளை கூட்டத்தில் இந்த விடயம் ஒலிக்காமல் இல்லை.

வலி. வடக்குப் பிரதேச சபையின் முன்னாள் தலைவரும், மாவையின் முன்னாள் 'கையாளு'மான சுகிர்தனைக் கட்சி இடைநிறுத்தி இருப்பதாக அந்தக் கூட்டத்தில் பச்சை பொய் அவிழ்த்து விட்டார் மாவையர்.

ஹரிஹரன் குறித்து கேட்கப்பட்ட போது 'ஏன், கூட்டம் பற்றிய செய்திகளை பேப்பரில் போடவா அவரை அழைப்பதற்கு?' என்று 'ஜனநாயகப் பண்புடன்'(?) பதில் கேள்வி எழுப்பி இருக்கிறார் மாவையர்.

இப்படிப்பட்டவர் பெருந்தலைவர் பதவிக்கு பொருத்தமானவரா என்று அந்த நண்பர் காலையில் எழுப்பிய கேள்வி சரிதான் என்று எனக்குப் பட்டது.

இதற்குள் இன்னொரு ஊடக நண்பர் நேற்று மதியம் தொலைபேசி அழைப்பு எடுத்தார்.

''நீங்கள் கூறுவது போல மாவை சேனாதிராஜா கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடவில்லை என்பது உண்மைதான். கட்சியில் அதிகாரம் உள்ள பதவி பொதுச்செயலாளர் பதவிதான். அதற்குத்தான் மாவை இம்முறை கண் வைத்திருக்கின்றார்'' - என்றார் அவர்.

எனக்கு அந்தத் தகவல் ஒரு வகையில் திருப்தி. இன்னொரு வகையில் எரிச்சல்.

பெருந்தன்மை இல்லாதவர் பெருந்தலைவராகாவிட்டால் நல்லதுதானே என்ற திருப்தி. மாவைதான் கட்சியின் செயலாளர் என்றால், தமிழரசுக் கட்சி குறித்து இனிப் பேசாமல் விடுவது நல்லது என்ற எரிச்சல்தான் அடுத்தது.

தமிழரசு உருப்பட்ட மாதிரிதான். தமிழ் மக்களை மட்டும் அல்ல, அக்கட்சியையும் அதன் ஸ்தாபகத் தலைவர் தந்தை செல்வா கூறியமை போல கடவுள்தான் இனிக் காப்பாற்ற வேண்டும்...!

இன்னொரு கொசுறுத் தகவல்:-

கொஞ்சக் காலத்துக்கு முன்னர் தந்தை செல்வாவின் பேரன் (சந்திரகாசனின் மகன்) இளங்கோவை திருகோணமலையில் சம்பந்தன் தமிழரசுக் கட்சிக்குள் நுழைத்து, மேலே கொண்டு வரப் போகின்றார் என ஒரு பேச்சடிபட்டது. இப்போது அவரை தந்தை செல்வாவின் காங்கேசன்துறைத் தொகுதிக் கிளை ஊடாகக் கொண்டு வருகிறார் மாவையர்.

பல எதிர்பார்ப்புகள் இந்த நகர்வுக்குப் பின்னால் இருக்கின்றன என்பது மட்டும் உண்மை. சந்தர்ப்பம் வரும் போது அவற்றைப் பார்ப்போம்.

you may also like