Thursday, October 8, 2026

இரகசியம் - பரகசியம் (03.06.2024)


இலங்கையின் அண்மைக் காலத்தில் பெரும் அரசியல் குழப்பத்தை - களேபரத்தை - ஏற்படுத்தியவர் என்றால் அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்க பண்டாரவாகத்தான் இருக்க முடியும்.

ஜனாதிபதிக்கும் தற்போதைய நாடாளுமன்றத்திற்கும் சர்வஜன வாக்கெடுப்பு மூலம் இரண்டு வருட கால பதவி நீடிப்பு வழங்குவது என்ற அவரது 'பீலா' யோசனை, அவரது கட்சியைப் 'பூமராங்' ஆகத் திரும்பி வந்து தாக்க, கடைசியில் அவரது கட்சியினரே அவரைக் கைவிட்டு, அவரது கருத்துக்கு மாறாக பகிரங்கமாகக் கருத்துரைக்க வேண்டியதாயிற்று.

ஆளும் தரப்புப் பிரமுகர்கள் மட்டுமன்றி, அவரது ஐக்கிய தேசிய கட்சியின் பெரிய தலைகளே, அந்தத் திட்டத்தை மறுத்துரைத்து 'பாதிப்பு சமாளிப்பு' (Damage Clearing) செய்யவேண்டியதாயிற்று. ஏன், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பிரதமர் தினேஷ் குணவர்தனம் கூட, ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் நடத்தப்படும் என்று விடயத்தைத் திருத்தி அறிவிக்க வேண்டியவர்களானார்கள்.

எல்லா கட்சிகளும், எல்லா தரப்புக்களும் தமது யோசனைத் திட்டம் தொடர்பில் தம் மீது பாய்ந்து விழுந்தமையை அடுத்து, என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிப் போன ஓய்வு பெற்ற சப் இன்ஸ்பெக்டரான பாலித ரங்க பண்டார, தமது கருத்துக்கள் தொடர்பில் விமர்சனங்கள் கூறியவர்கள் குறித்து ஆறுதலாக இன்று செய்தியாளர் மாநாடு ஒன்றைக் கூட்டி பதிலடி தருவார் எனத் தெரிவித்திருக்கின்றார்.

கொழும்பு செய்தி வட்டாரங்கள் எல்லாம் இன்றைய அந்த ஊடக மாநாட்டுக்காகக் காத்திருக்கின்றன.

இதற்கிடையில் -

மொட்டுக் கட்சியுடன் நெருக்கமாகப் பழகும் ஒரு தரப்பு நேற்று ஒரு தகவலை அவிழ்த்து விட்டுள்ளது.

மொட்டுக் கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்க இறங்கக் கூடிய இணக்கநிலை அடுத்து வரும் பத்துப் பன்னிரண்டு நாள்களில் எட்டப்படாவிட்டால், மொட்டுக் கட்சி தனது வேட்பாளரை தன்பாட்டில் அறிவிக்கும். அது பலரும் எதிர்பார்ப்பது போல பிரபல கோடீஸ்வர வர்த்தகர் தம்மிக்க பெரேரா அல்லர். ஏற்கனவே மூன்று முனைப் போட்டியிருக்கையில் தான் நான்காவது முனையாகக் களத்தில் இறங்க அவர் விரும்பவில்லையாம். நாட்டின் தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தனவை மொட்டு தனது வேட்பாளராகக் களம் இறக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றார் அவர்.

அப்படி ஒரு நிலைமை வந்து, ரணிலும் போட்டியிட்டால், அதனோடு சேர்ந்து, தான் களமிறங்குவார் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ கூறி வருவதும் சாத்தியமாகுமானால், ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் வரை அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருந்த ஜனாதிபதி, பிரதமர், நீதி அமைச்சர் மூவரும் எதிரும் புதிருமாக தேர்தலில் நிற்கும் அரசியல் அதிசயம் இலங்கையில்தான் நடந்ததாக இருக்கும்....! 

you may also like