Friday, October 9, 2026

இரகசியம் - பரகசியம் (02.02.2026)


''அண்மையில் வீசிய சூறாவளி தாக்கத்தின் பின்னர் இலங்கையை மீள கட்டியெழுப்பும் திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாகாண சபைத் தேர்தல்களைத் திட்டமிட்டபடி இந்த ஆண்டில் நடத்துவது சாத்தியமற்றது. இருப்பினும் தேர்தல் நடத்துவதற்கான ஆரம்பக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன'' என்ற சாரப்பட அரசாங்கப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார் என்று சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண அரசியல் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இத்தகைய அறிவிப்பு அரசு தரப்பில் இருந்து வரும் என்பது எதிர்பாக்கப்பட்ட ஒன்றுதான்.

நமது யாழ்ப்பாணத்துக்கு சித்தர் யோகர் சுவாமிகள் நான்கு மகா வாக்கியங்களை அடிக்கடி போதித்தார்.

'எப்பவோ முடிந்த காரியம்'(எல்லாம் இறைவன் செயல். எப்போதோ தீர்மானிக்கப்பட்டது), 'சும்மா இரு' (மனதை அடக்கி இறைவனோடு இரு), 'முற்றும் உண்மை' (எல்லாம் உண்மை), 'ஒரு பொல்லாப்புமில்லை'(எதுவும் தீமையில்லை) என்பவை அவை.

இதில் 'எப்பவோ முடிந்த காரியம்' என்பது முக்கியமான ஒன்றாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்த மாட்டாது என்பது யோகர் சுவாமியின் மகா வாக்கியத்தில் கூறுவதானால் எப்பவோ முடிந்த காரியம்தான்.

2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த பெருவெற்றிகள், அடுத்த ஆண்டில் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தலில் அடிபட்ட போதே, மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அக்கட்சிக்கு அறவே அகன்று விட்டது என்பது அரசியலில் அரிச்சுவடி படித்தவர்களுக்கும் தெரிந்ததுதான்.

முதல் இரண்டு தேர்தல்களிலும் ஆரவாரமாகப் பங்கு பற்றிய தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி மூன்றாவது தேர்தல் - உள்ளூராட்சி தேர்தல் - பின்னடைவோடு படுத்துவிட்டது.

அப்போதே, இனி மாகாண சபைத் தேர்தலை இந்த அரசு நடத்தாது, சூடு கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது என்பது விளங்கியதுதான்.

அண்மையில் கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய போது மாகாண சபை தேர்தல் தொடர்பில் இலங்கை அரசின் நிலைப்பாடு யாது என்று அவர் தமிழ் தலைவர்களிடம் கேட்டார்.

அடுத்த ஆண்டில் மாகாண சபைத் தேர்தல் என்பதுதான் ஜனாதிபதியின் நிலைப்பாடு எனத் தமிழ் பிரதிநிதி ஒருவர் குறிப்பிட்ட போது அமைச்சர் ஜெய்சங்கர் குறுக்கிட்டார்.

''ஜனாதிபதி எந்த ஆண்டில் இருந்து கொண்டு அடுத்த ஆண்டில் தேர்தல் என்று குறிப்பிடுகிறார்?'' - என இந்திய வெளிவகார அமைச்சர் 'ஸ்மார்ட்டாக' கேள்வி எழுப்பினார். அதற்கு சுமந்திரன் பதில் தந்தார்.

''2024 இல் ஜனாதிபதி பதவி ஏற்ற சமயம் அடுத்த ஆண்டில் தேர்தல் என்றார் ஜனாதிபதி. பின்னர் 2025 இல் வந்து நின்று கொண்டு அடுத்த ஆண்டில் தேர்தல் என்கிறார். எப்போது தேர்தல் நடக்கும் என்பது தெரியவில்லை. 2026 இல் வந்து அப்போதும் அடுத்த ஆண்டில் தேர்தல் எனப் புதுக் கதை விடுவாரோ என்னவோ...?'' என்றார் சுமந்திரன்.

கடந்த ஆண்டு இறுதியில் இந்திய வெளிவகார அமைச்சரிடம் சுமந்திரன் சந்தேகமாகக் குறிப்பிட்ட விடயம் அடுத்த ஆண்டு ஜனவரி முடிவடைவதற்கு முன்னரே உறுதியாகிவிட்டது.

மாகாண சபைத் தேர்தல்களைத் திட்டமிட்டபடி இந்த ஆண்டில் நடத்துவது சாத்தியமற்றது என்பதை இப்போது 2026 என் ஆரம்பத்திலேயே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ கோடி காட்டி விட்டார்.

அப்படியானால் அரசின் உத்தேச திட்டம் என்ன?

தற்போது நடைமுறையில் உள்ள அரசமைப்பின் உருவாக்கத்தின் பின்னர் தமது அரசியல் தேவைக்காக அந்த அரசமைப்பை கொண்டு வந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன சில சித்து விளையாட்டுக்களைக் காட்டினார். அதைத் திரும்பவும் செய்யக் கூடிய வலிமை நிலையில் தான் இருக்கின்றது என அநுர குமார திஸநாயக்க அரசு கருதுகின்றது. அதனைப் பயன்படுத்தி தேர்தல்களை முடக்கும் திட்டம் ஒன்றை தேசிய மக்கள் சக்தி மனதில் கொண்டிருப்பதாக கொழும்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்த அரசியல் சதித்திட்டம் யாது என்பதை அடுத்து வரும் தினங்களில் பார்ப்போம்.


you may also like