- by Editor
- 3 months ago
இரகசியம் - பரகசியம் (02.01.2024)
சீனாவுக்கும் நமது கடற்றொழில் அமைச்சுக்கும் முடிச்சுப் போடுகின்ற சர்ச்சைகள் முடிவுக்கு வரா போலும்.
இப்போது புதிய சர்ச்சை ஒன்று பற்றிய தகவல் வெளிவந்திருக்கின்றது.
நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட நம்நாட்டில் கடல் வளம் கொட்டிக் கிடக்கின்றது. ஆனால், அப்படிப்பட்ட நாடு மீனை இறக்குமதி செய்கிறது. - குறிப்பாக சீனாவிடமிருந்து.
மீன்பிடிக் கூட்டுத்தாபனம் இப்படி மீனை இறக்குமதி செய்வது குறித்து கடந்த ஆண்டு பலத்த வாதப்பிரதிவாதங்களும் சர்ச்சைகளும் எழுந்தமை தெரிந்ததுதான்.
அப்போது இலங்கைக் கடலில் இல்லாத - சத்தான வகை - மீன்களே இவ்வாறு இறக்குமதி செய்யப்படுகின்றன எனச் சமாதானம் கூறப்பட்டது.
அந்த இறக்குமதி குறித்து அரசல்புரசலாக பேசப்பட்டாலும், இந்த இறக்குமதியில் 15 கோடி ரூபா முறைகேடு இருப்பதாக மீன்பிடிக் கூட்டு ஸ்தாபனத்தின் கணக்காய்வுப் பிரிவு இப்போது கேள்வி எழுப்பி இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
அப்படி என்ன சத்தான மீன் அது, எந்த ரகம் என்று தேடிப் பார்க்க முயற்சித்தேன். ஆனால் அந்த இறக்குமதி மீன் எங்களுக்குக் கிடைக்காது என்று ஒரு தரப்பில் விளக்கம் கூறப்பட்டது.
ஆக, படைகள், வைத்தியசாலை, சிறைச்சாலை ஆகிய தரப்பினரின் பாவனைக்கு என்று மட்டுமே அவை இறக்குமதி செய்யப்படுகின்றனவாம். அதனால் எங்கள் கண்களில் அவற்றைக் காட்ட மாட்டார்கள் என்று கூறிவிட்டார்கள்.
இறக்குமதியும் விநியோகமும் வெளித் தரப்புகளுக்கு இல்லாமல் அரசின் உள்வீட்டுச் சுற்றுக்கு மட்டுமே என்பதால் முறைகேடுகள் தாராளமாக இடம்பெற வாய்ப்புண்டு. துறை சார் அமைச்சருக்கு இந்த முறைகேடு குறித்த விவகாரம் தெரியுமோ தெரியவில்லை.
சீனா என்றதும் இன்னொரு விடயம் நினைவுக்கு வருகின்றது.
ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியானதும் அவரது தேசியப் பட்டியல் எம்.பி. பதவி அவரது ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த வஜிர அபேயவர்த்தனக்கு வழங்கப்பட்டது .
அவர் ''இலங்கையை சீனாவாக மாற்ற வேண்டும்! சீன அரசமைப்பு இங்கு கொண்டுவரப்பட வேண்டும்! சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட வேண்டும்!'' - என்றெல்லாம் கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
''இலங்கையைச் சீனா போன்று மாற்ற வேண்டுமாயின், சீன அரசமைப்பின் சரத்துக்கள் எமது நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும். ஜனநாயகம் என்ற பெயரில் மக்களுக்கு காட்டுக் கழுதை சுதந்திரம் வழங்கப்படக் கூடாது. சீனாவைப் போன்று சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட வேண்டும்''- என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன மாயையில் மூழ்கியிருக்கும் நாட்டையும் அதன் தலைவர்களையும் திருத்துவது நாய் வாலை நிமிர்த்தும் பணிக்கு ஒப்பானது....!