Wednesday, October 7, 2026

இந்தியா, சீனாவுக்கு 12.5% மேலதிக வரி? அமெரிக்காவின் அடுத்த அதிரடிப் பரிந்துரை


அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ளாத நாடுகளின் பொருட்களுக்கு மேலதிக இறக்குமதி வரி விதித்திருந்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நடவடிக்கைக்கு அமெரிக்க உச்சநீதிமன்றம் முன்பு தடைவிதித்தது.

அந்த வரி விதிப்பு சட்டபூர்வமானதல்ல எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், வசூலிக்கப்பட்ட வரிகளை திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டது. இதையடுத்து கூடுதல் இறக்குமதி வரி நடைமுறை கைவிடப்பட்டது.

இந்நிலையில், கட்டாய உழைப்பால் தயாரிக்கப்படும் பொருட்களின் இறக்குமதியைத் தடுக்க அமெரிக்க சட்டங்களை முறையாக அமல்படுத்தத் தவறிய நாடுகளுக்கு புதிய வரி விதிக்க அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் அலுவலகம் (USTR) பரிந்துரை செய்துள்ளது.

அதன்படி, கனடா, மெக்சிகோ, தைவான் மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் இறக்குமதி வரி விதிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு 12.5 சதவீத வரி விதிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

கட்டாய உழைப்பின் மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் அமெரிக்க சந்தைக்குள் நுழைவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் இந்த நாடுகள் போதுமான முன்னேற்றம் காண்பிக்கவில்லை என அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்காவின் "Forced Labour" (கட்டாய உழைப்பு) சட்டத்தின் கீழ், குழந்தைத் தொழிலாளர்களை பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்கள் மற்றும் சிறைச்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரி பரிந்துரை தற்போது பொதுமக்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புகளின் கருத்துகளுக்காக வெளியிடப்பட்டுள்ளது. ஆலோசனைக்குப் பிறகு அதன் இறுதி வடிவம் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

you may also like