- by Editor
- 2 years ago
அலெக்ஸின் மரணம் தொடர்பான நேற்றைய நீதிமன்ற விசாரணை: நடந்தவை பற்றிய ஒரு தொகுப்பு
-
- by Editor,
- 2 years ago
- in இலங்கை செய்திகள்
(நடராசா லோகதயாளன்)
வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு உயிரிழந்த நா.அலெக்ஸின் மரணம் தொடர்பில் 5 பொலிஸாரைக் கைது செய்ய யாழ்ப்பாணம் நீதிவான் ஏ.ஆனந்தராஜா நேற்று உத்தரவு பிறப்பித்தார்.
நவம்பர் மாதம் 8ஆம் திகதி வட்டுக்கோட்டைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களில் ஒருவரான நாகராசா அலெக்ஸின் மரணம் இயற்கையானதா அன்றி மனித உயிர்ப்போக்கா எனக் கண்டறியும் நோக்கில் யாழ்ப்பாணம் பொலிஸாரினால் நேற்றைய தினம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணையின்போதே நீதிவான் தனது கட்டளையின்போது இதனைக் குறிப்பிட்டார்.
இந்த வழக்கை யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகரான டி.சி.விஜயக்கோன் தாக்கல் செய்து இந்த மரணம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார். சட்ட வைத்திய அதிகாரியும் மரணம் தொடர்பில் ஏதும் குறிப்பிடவில்லை, காயமும் கடும் காயம் எனவும் குறிப்பிடவில்லை என்பதைத் தெரியப்படுத்தினார். உயிரிழந்தவரை பொலிஸார் 10ஆம் திகதி அராலியில் ஓர் ஆயுள்வேத வைத்தியரிடமும் அழைத்துச் சென்றுள்ளனர். இதேநேரம் 2023-11-11 அன்றே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனப் பதிவேட்டில் உள்ளது என்றார்.
இதனையடுத்து சிறைக் காவலர்களான கந்தசாமி கமலதாஸ் மற்றும் ச.சத்தியமூர்த்தி ஆகியோர் சாட்சியம் அளித்தனர்.
இவற்றினையடுத்து 3ஆவது சாட்சியாக உயிரிழந்த நா.அலெக்ஸுடன் கைது செய்யப்பட்டு உடன் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுதாகரன் துவாகரன் சாட்சியமளித்தார்.
இவர் தனது சாட்சியத்தை ஆரம்பித்து சிறிது நேரத்தில் நிற்காமல் கூண்டில் அமர்ந்து இருந்து சாட்சியமளிக்க அனுமதிகோரி இருக்கையில் அமர்ந்து சாட்சியமளித்தார்.
துவாகரன் தனது சாட்சியத்தில் கூறியவற்றின் சாரம் வருமாறு:-
2023-11-08 அன்று நீல நிற ஓட்டோவில் எம்மைப் பொலிஸார் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் கொண்டு சென்று, அங்கு முன்னால் என்னை இருத்திவிட்டு அலெக்ஸை மட்டும் தனியாக உள்ளே அழைத்துச் சென்றனர். அவ்வாறு அலெக்ஸை உள்ளே அழைத்துச் சென்று சிறிது நேரத்தில் பலமாக அடித்துச் சத்தம் கேட்டதோடு அலெக்ஸ் 'ஐயோ', 'ஐயோ' எனப் பலமாக குளறும் சத்தம் கேட்டது. இவ்வாறு இரண்டரை மணிநேரம் தாக்கினர். அதன் பின்பு என்னை அழைத்துச் சென்று ஓர் அறையின் ஜன்னல் ஊடாக அலெக்ஸைக் காண்பித்து நீயும் உண்மையைக் கூறாது விட்டால் இப்படித்தான் தொங்குவாய் என்றனர்.
அதன்போது அலெக்ஸ் நீல நிறக் கயிற்றினால் கட்டித் தூக்கப்பட்டிருந்தார். என்னையும் சஞ்சீவன் என்னும் பொலிஸ் உத்தியோகத்தர் காலால் உதைத்து வீழ்த்தினார். அதன்போது கயிற்றினால் அடித்தனர். காலால் உதைத்தனர். அதன் பின்பு குந்தி இருக்கவிட்டு இருகாலையும் முன்னால் மடக்கி இழுக்க ஒருவர் முதுகில் ஏறி அமர்ந்துகொண்டார்.
இதனிடையே ஒரு பையை மணக்கத் தந்தனர். அதில் பெற்றோல் மணம் வீசியது. அதனையே அலெக்ஸின் முகத்தில் கட்டினர். பொலிஸ் நிலையத்துள் இடம்மாற்றி மாற்றி சித்திரவதை தொடர்ந்தது. - என்றார்.
இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி என்.சிறீக்காந்தா நீதிபதியின் ஊடாக 'நீங்கள் ஏன் அமர்ந்து இருந்து சாட்சியளிக்கின்றீர்கள்?' எனக் கேட்டபோது 'என்னையும் பொலிஸார் தாக்கியமையினால் இன்றுவரை நிற்க, நடக்க இயலவில்லை' என சாட்சி பதிலளித்தார்.
இதன்போது சட்டத்தரணி க.சுகாஸ் நீதிபதியிடம், இந்த வழக்கின் முக்கிய சாட்சயான இவரின் பாதுகாப்புக் கருதி ஓர் பாதுகாப்பான இடத்தில் இவர் தங்க வைக்க அனுமதிக்கப்பட வேண்டும் எனக் கோரினார். அதனை ஆராய்ந்த நீதிபதி அதற்கு அனுமதிக்கப்படுகின்றது, எந்த இடம் என்பதனை முன் வையுங்கள், அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
இதனையடுத்து 3ஆம் சாட்சியின் வாக்குமூலப் பதிவு நிறைவுற்ற சமயம் நீதிபதி 10 நிமிடம் மன்றை ஒத்தி வைத்தார். பின்னர் நீதிமன்றம் மீண்டும் கூடியது.
இதனையடுத்து 4ஆம் சாட்சியாக உயிரிழந்த அலெக்ஸிற்கு சிகிச்சையளித்த அராலி வடக்கு வட்டுக்கோட்டையைச் சேர்ந்த ஆயுள்வேத வைத்தியர் செல்லத்துரை பரமசிவம் (வயது 74) அழைக்கப்பட்டார்.
ஆயுள்வேத வைத்தியரிடம் உயிரிழந்த அலெக்ஸை முன்னர் உங்களுக்குத் தெரியுமா எனக்கேட்டபோது இல்லை எனப் பதிலளித்தார். அவர் தமது சாட்சியத்தை தொடர்கையில் கூறியவை வருமாறு:-
2023-11-10 அன்று இரவு 9.15 மணியளவில் அலெக்ஸை என்னிடம் அழைத்து வந்தபோதே அவர் நடக்க இயலாமலேயே வந்தார். அதன்போது கையில் காயமும் சிறிய கம்பிக் காயங்களும் கை வீக்கமும் காணப்பட்டன. அதன்போதே நான் பொலிஸாரிடம் கை விலங்கு போட்டதால் இத்தகைய வீக்கம் ஏற்படாது எனக் குறிப்பிட்டமையோடு, உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு பொலிஸாரிடம் தெரிவித்தேன். இவ்வாறு நோயாளயைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கும்போதும் அவர் வாந்தியெடுத்தார். - எனத் தெரிவித்தார் ஆயுள் வைத்தியர்.
அவரிடம் அலெக்ஸை அழைத்து வந்த பொலிஸாரைத் தெரியுமா எனக் கேட்டபோது செல்வா மற்றும் பெரேரா ஆகிய இரு பொலிஸ் உத்தியோகத்தர்களின் பெயரை அவர் வெளியிட்டார்.'
மூத்த சட்டத்தரணி என்.சிறீக்காந்தா நீதிமன்ற அனுமதியுடன் அவரிடம் கேள்வி எழுப்பினார்.
பொலஸாரின் தடுப்பில் இருப்பவர்களை உங்களிடம் அழைத்து வருவார்களா, அலெக்ஸை அரச வைத்தியசாலையில் வைத்தியம் பெற பரிந்துரைக்கவில்லையா, பொலிஸில் தடுப்பில் இருப்பவரை பார்த்துப் பரிசோதிக்க உங்களிற்கு அனுமதி உண்டா என சாட்சியிடம் வினாவினார்.
இவற்றிற்கு பதிலளித்த ஆயுள்வேத வைத்தியர்-
இதற்கு முன்பு இப்படி அழைத்து வந்தமை கிடையாது. அதேநேரம் அழைத்து வந்தவுடனேயே நான் அவர்களிடம் கூறிவிட்டேன் அரச வைத்தியசாலைக்கு உடன் அழைத்துச் செல்லுமாறு. இருப்பினும் அழைத்து வந்த நேரம் இரவு 9.15 என்பதனால் மனிதாபிமான அடிப்படையில் பார்வையிட்டேன். - என சாட்சி தெரிவித்தார்.
இதனையடுத்து அரச சட்ட வைத்திய நிபுணரான மயூரதன் 5 ஆவது சாட்சியாக இது இயற்கை மரணமா அல்லது தண்டிக்கப்படவேண்டிய விதத்தில் விளவிக்கப்பட்ட மரணமா என்ற அடிப்படையில் சாட்சியம் அளித்தார்.
அலெக்ஸ் இறந்த திகதி 2023-11-19. அவரை சிறைச்சாலையில இருந்து வைத்தியசாலைக்குக் கொண்டு வந்தபோது அவர் உயிரிழந்திருந்தார். இவரது உடற்கூற்று பரிசோதனை 2023-11-20 அன்றே இடம்பெற்றது. கைகள் செயலிழந்தமையால் வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு 2023-11-12 இல் மல்லாகம் சட்ட வைத்திய அதிகாரி வழங்கிய சிபார்சிற்கமைய 2023-11-12 அன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 2023-11-16 விடுவிக்கப்படும் சமயத்திலும் ஓர் உதவி சட்ட வைத்திய அதிகாரி பார்வையிட்டிருந்தார்.
அலெக்ஸின் பிரேத பரிசோதனையின்போது பல காயங்கள், கண்டல்கள் காணப்பட்டன. தசையில் காணப்படும் கண்டல் காரணமாக மயோபிளிஸ் என்னும் இரசாயனம் வெளியேறி, குருதியுடன் கலந்து இந்த மரணம் ஏற்பட்டிருக்கலாம். இயற்கை மரணந்திற்கான காரணிகள் உடலின் உள்ளேயோ அல்லது வெளியிலோ வெற்றுக் கண்ணிற்கு தென்படவில்லை என்றார்.
அப்போது மன்றில் இதுவரையான சாட்சிகளின் பிரகாரம் அலெக்ஸ் தாக்கப்பட்டார் எனத் தகவல் கிடைத்துள்ளது, அதன் பிரகாரம் 19ஆம் திகதிய மரணம் ஏற்பட வாய்ப்பு உண்டா என நீதிபதி கோட்டார்.
இதற்கு பதிலளித்த சட்ட வைத்திய நிபுணர், ''ஆம். இது காயத்தினால் ஏற்பட்ட விளைவு. அது 7 நாள்களிற்கு முன் ஏற்பட்ட காயமாகவே காணப்பட்டது. அதில நயிலோன் கயிற்றினால் பல மணிநேரம் தூக்கில் தொங்கியமையால் ஏற்பட்ட காயங்கள், கை, கால் மற்றும் பற்பகுதிகளில் அடி காயங்கள் காணப்பட்டன. வெற்றுக் கண்ணுக்கு இவை தெரிந்தாலும் விஞ்ஞான முடிவிற்காகவே இது ஓர் இயற்கை மரணம் அல்ல என எழுதி ஆய்வற்கு அனுப்பி அதன் முடிவு வந்த பின்பு காரணம் குறிப்பிடப்பட முடியும் என்றார் சட்ட வைத்திய நிபுணர்.
அவ்வாறானால் இது ஓர் ஆள் கொலையை என வினாவியபோது ஆம் என அவர் பதிலளித்தார்.
அது தடுப்புக் காவலில் இருந்து சித்திரவதை மரணமாீருக்கலாமா எனவும் வினாவப்பட்ட சமயம் ஆம் என அவர் பதிலளித்தார்.
இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி சிறீக்காந்தா இன்றைய சாட்சிகளின் அடிப்படையில் பெயர் குறிப்பிடப்பட்ட 3 பொலிஸ் உத்தியோகத்தர்களையும் குற்றவியல் சட்டக் கோவைக்கேற்ப கைது செய்து ஆஜர் செய்யவும், அடையாளம் கூறியவர்களை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும் உத்தரவிட வேண்டும் என மன்றை கோரினார்.
இவற்றை ஆராய்ந்த நீதிபதி இயற்கையானது அன்றி ஏற்படுத்தப்பட்ட மனித உயிர்ப் போக்கிற்கு காரணமானவர்கள் என உடன் இருந்த சந்தேக நபரினால் பெயர் குறிப்பிடப்பட்டு, அடையாளம் கூறப்பட்ட 3 பொலிஸரையும் கைது செய்யுமாறும், ஏனையோரைக் கைது செய்யும் வகையில் சாட்சியினால் கூறப்பட்ட அடையாளங்களை ஒத்தவர்களை இனம் காண்பதற்கு அடையாள அணவகுப்பு நடாத்த ஏற்பாட்டை மேற்கொள்ளுமாறு வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கான கட்டளையை நீதிமன்ற பதிவாளரை அனுப்பி வைக்குமாறு ப்ணித்தார்.
உயிரிழந்தவருடன் உடன் இருந்த இரண்டாம் சந்தேக நபரும் 3 ஆவது சாட்சியுமானவரை பொலிஸ்சர் சில விடயங்களை இனம் காண அழைத்துச் செல்லக் கோருவதனால் இரு சட்டத்தரணிகளான க.சுகாஷ் மற்றும் மயூரன் சகிதம் அழைத்துச் செல்லவும் நீதிவான் கட்டளையிட்டார்.
இந்த வழக்கில் உயிரிழந்தவர் சார்பில் 12 பெண் சட்டத்தரணிகள் உட்பட 37 சட்டத்தரணிகள் ஆஜராகினர்.