- by Editor
- 3 years ago
அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து சுரேன் ராகவன் கடும் விமர்சனம்
-
- by Editor,
- 1 day ago
- in இலங்கை செய்திகள்
அரசாங்கத்தின் தற்போதைய செயற்பாடுகள், பொருளாதார முகாமைத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சி தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உபசெயலாளர் சுரேன் ராகவன் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
காணாமல்போன 23 கொள்கலன்கள் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கு மேலும் மூன்று மாத கால அவகாசம் தேவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், எதிர்வரும் மூன்று பௌர்ணமி தினங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குப் பாரிய அரசியல் இழப்பை ஏற்படுத்தியது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவே என்பதைத் தாம் நன்கு அறிந்திருந்தாலும், அக்கட்சியினர் மீது தங்களுக்கு எவ்வித கோபமும் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் சட்டத்தின் ஆட்சி தொடர்பான வாக்குறுதிகளை விமர்சித்த சுரேன் ராகவன், அனைவருக்கும் சட்டம் சமமானது என ஜனாதிபதியால் இனியும் கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
சிறைச்சாலையில் உள்ள பௌத்த பிக்குகளின் சட்ட நடைமுறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, வணக்கத்திற்குரிய கலகொடஅத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட பிக்குகள் பொதுவெளியில் செல்லும்போது தங்களது துறவறத்துக்குரிய காவி உடைகளை அணியக்கூடிய வகையில் 48 மணித்தியாலங்களுக்குள் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், அதற்காகத் தனது நன்றியையும் தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதார முகாமைத்துவம் முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், குத்தகை அடிப்படையிலான வாகனக் கொள்வனவு வசதிகள் மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்கான கடன்களுக்கான வட்டி விகிதங்கள் இன்னமும் அதிகமாகக் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
நாடு பொருளாதார நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொண்டுள்ள நிலையில், உத்தியோகபூர்வ பயணங்களுக்கான வாகனங்கள் பழுதடைந்துள்ளதாகக் கூறி 1,750 புதிய வாகனங்களைக் கொண்டுவர வேண்டுமென ஜனாதிபதி மூன்று தடவைகள் வலியுறுத்தியுள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம், இலங்கை வரலாற்றில் உருவாக்கப்படவுள்ள மிகவும் ஆபத்தான மற்றும் ஜனநாயக விரோதமான சட்டமாக அமையக்கூடும் என எச்சரித்த சுரேன் ராகவன், நாட்டின் நிலக்கரி இருப்புகளும் முடிவடையும் நிலையை எட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
இறுதியாக, அண்மையில் 750 பௌத்த பிக்குகளைச் சந்தித்து அவர்களின் வாழ்க்கை முறை தொடர்பில் கலந்துரையாடியதாகக் குறிப்பிட்ட அவர், இலங்கையைப் பொறுத்தவரையில் பௌத்த பிக்குகள், பௌத்த சாசனம் மற்றும் அரசு ஆகியவை தனித்தனியான கூறுகள் அல்ல எனத் தெரிவித்தார்.
அவை மூன்றும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்த ஒரே அங்கமாகச் செயற்படுகின்றன எனக் குறிப்பிட்டு அவர் தனது உரையை நிறைவு செய்தார்.