Friday, October 9, 2026

அமைதியும் சகோதரத்துவமும் நிறைந்த உலகை உருவாக்குவோம் - பிரதமர் ஹரிணி


முஹம்மது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களால் மிகுந்த இறைபக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடப்படும் மீலாதுன் நபி தினத்திற்கான வாழ்த்துச் செய்தியை வெளியிடக் கிடைத்தமை தமக்குக் கிடைத்த பாக்கியம் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

புனித மீலாதுன் நபி தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகில உலகிற்கும் போதித்தது அமைதி, சமத்துவம், கருணை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட உன்னதமான செய்தியாகும் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய உலகம் பல்வேறு அரசியல், பொருளாதார மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருவதுடன், கொடூரமான யுத்த மோதல்களால் அப்பாவி மக்கள் உயிரிழந்து துன்பங்களை அனுபவித்து வரும் நிலையில், நபிகள் நாயகத்தின் தொலைநோக்குத் தத்துவம் முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தின் வாழ்க்கையிலிருந்து இன்றைய சமூகத்திற்கும் இலங்கைக்கும் பெற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த முன்மாதிரிகளாக நீதி, மதச்சகிப்புத்தன்மை மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வுக்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றை பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு இனங்களையும் மதங்களையும் சேர்ந்த மக்கள் வாழும் நாடாக, ஒருவரையொருவர் புரிந்துகொண்டு உணர்வுபூர்வமாக ஒன்றிணைந்து முன்னேறுவதற்கு நபிகள் நாயகத்தின் முன்மாதிரிகளை நடைமுறை வாழ்க்கையில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாடும் இந்தப் புனித தருணத்தில், உலகம் போர்ச் சூழல்களிலிருந்து விடுபட்டு அமைதியான உலகமாக மாற வேண்டும் என தாம் மனமாரப் பிரார்த்திப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், உலகின் பல்வேறு பகுதிகளில் போரின் கொடூரம் மற்றும் துன்புறுத்தல்களால் பாதிக்கப்பட்டு, இடம்பெயர்ந்து வேதனையடைந்து வரும் அனைத்து மக்களுக்கும் அமைதி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் ஒரே பிரார்த்தனையாக அமைய வேண்டும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இம்முறை கம்பஹா மாவட்டத்தை மையமாகக் கொண்டு, நீர்கொழும்பு பெரியமுல்லை அல் ஹிலால் தேசிய பாடசாலை வளாகத்தில் நடைபெறும் தேசிய மீலாதுன் நபி கொண்டாட்டம், நாட்டின் பன்முகத்தன்மையைப் போற்றுவதற்கும் மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்துவதற்கும் சிறந்த வாய்ப்பாக அமையும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தேசிய விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்குப் பாடுபடும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் உள்ளிட்ட அனைத்து ஏற்பாட்டுக் குழுவினருக்கும் பிரதமர் தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையிலும் உலகெங்கிலும் வாழும் அனைத்து முஸ்லிம்களுக்கும் அமைதி, சௌபாக்கியம், சகோதரத்துவம் மற்றும் மகிழ்ச்சி நிறைந்த இனிய மீலாதுன் நபி தின நல்வாழ்த்துகளை பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

you may also like