Sunday, October 4, 2026

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாயின் மதிப்பு 5.5% வீழ்ச்சி


அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி, இந்த ஆண்டு ஆகஸ்ட் மாத இறுதி வரையான காலப்பகுதியில் 5.5 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

எனினும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பணவியல், நிதி மற்றும் முன்னெச்சரிக்கை கொள்கை நடவடிக்கைகளின் தாக்கம் காரணமாக, கடந்த சில வாரங்களில் இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயக் கொள்வனவுகளின் காரணமாக, சீன மக்கள் வங்கியுடனான வெளிநாட்டு நாணய பரிமாற்ற வசதியும் உள்ளடங்கலாக நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு 6.6 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூலை மாத இறுதி நிலவரப்படி இந்த கையிருப்புத் தொகை பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

நடப்புக் கணக்கில் தொடரும் பற்றாக்குறை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகளின் தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில், ஜூலை மாதத்தில் இலங்கையின் வெளிநாட்டு நடப்புக் கணக்கில் 142 மில்லியன் அமெரிக்க டொலர் பற்றாக்குறை பதிவாகியுள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் ஜூலை மாதத்துக்காக வெளியிடப்பட்ட வெளிநாட்டுத் துறைசார் செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மேலும், நடப்புக் கணக்கு தொடர்ச்சியாகப் பற்றாக்குறையைப் பதிவு செய்யும் நான்காவது மாதமாக ஜூலை அமைந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

you may also like