- by Editor
- 2 months ago
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டதாக பாகிஸ்தான் அறிவிப்பு
-
- by Editor,
- 3 months ago
- in உலக செய்திகள்
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நீடித்து வரும் பதற்றத்தை தணிக்கும் வகையில், “இறுதியான மற்றும் இருதரப்பும் ஒப்புக்கொண்ட அமைதி ஒப்பந்த உரை” எட்டப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
அமைதி ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பரவி வரும் ஊகங்களை நம்ப வேண்டாம் என அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் எச்சரித்திருந்த நிலையில், பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளப் பதிவில் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.
அதில் அவர், “இந்த அமைதி ஒப்பந்தத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளை இறுதி செய்வதற்காக பாகிஸ்தான் தற்போது இருதரப்புடனும் மிக நெருக்கமாக பணியாற்றி வருகிறது. அமைதி என்பது இதற்கு முன் இல்லாத அளவுக்கு தற்போது மிகவும் அருகில் உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.
இதே கருத்தை ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சியும் வெளிப்படுத்தியுள்ளார். ஒப்பந்தம் “முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக அருகில்” உள்ளதாக அவர் கூறியதுடன், ஊடகங்கள் ஊகங்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த தகவலை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ கணக்கில் மறுபதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்த ஒப்பந்தம் இன்னும் முழுமையாக இறுதி செய்யப்படவில்லை என வெள்ளை மாளிகையின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா முன்வைத்துள்ள முக்கிய நிபந்தனைகளில், ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை முழுமையாக கலைத்தல், செறிவூட்டப்பட்ட யுரேனியம் உள்ளிட்ட அணுசக்தி பொருட்களை அகற்றுதல், ஹோர்முஸ் நீரிணையை சர்வதேச கப்பல் போக்குவரத்துக்காக முழுமையாக திறத்தல் மற்றும் பிராந்திய ஆயுதக் குழுக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை நிறுத்துதல் ஆகியவை அடங்கும் என கூறப்படுகிறது.
இந்த நிபந்தனைகளை ஈரான் நிறைவேற்றிய பின்பே முடக்கப்பட்ட சொத்துக்கள் மற்றும் நிதிகள் விடுவிக்கப்படும் எனவும் அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், ஈரான் வெளியுறவு அமைச்சக பேச்சாளர் இஸ்மாயில் பகாஹி, ஒப்பந்த வரைவு இறுதி கட்டத்தில் உள்ளதாகவும், பல்வேறு தரப்புகளில் ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், ஒப்பந்தம் கையெழுத்தாகும் இடம் அல்லது நேரம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை.
அதேவேளை, தெஹ்ரானில் இருந்து கிடைத்த தகவலின்படி, இந்த ஒப்பந்த வரைவு இறுதி செய்யப்படுவதற்கு முன் இராணுவத் தலைமையகம், இஸ்லாமிய புரட்சிகர காவல் படை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உச்ச தலைவர் உள்ளிட்ட பல நிலைகளில் பரிசீலனை நடைபெற வேண்டும் என கூறப்படுகிறது.
முன்னதாக, ஈரானிய அரச செய்தி நிறுவனம் வெளியிட்டதாக கூறப்பட்ட 7 அம்ச அறிக்கையை டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். அந்த அறிக்கையில் கூறப்பட்ட தகவல்கள் தவறானவை என தெரிவிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஈரான் தரப்பு மன்னிப்பு கேட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
வரும் வார இறுதிக்குள் புதிய அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாகும் என நம்புவதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.