Sunday, October 11, 2026

அபராதம் செலுத்துமாறு வரும் போலி குறுஞ்செய்திகள் குறித்து பொலிஸார் எச்சரிக்கை


பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் அனுப்பப்பட்டதாகக் காட்டி, அபராதப் பணத்தைச் செலுத்துமாறு கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படும் போலி குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

இவ்வாறான குறுஞ்செய்திகள் கிடைத்தால் உடனடியாக அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

போக்குவரத்து கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் W.P.J. சேனாதீர தெரிவிக்கையில், பொலிஸ் போக்குவரத்து பிரிவினால் இதுபோன்ற எந்தவொரு குறுஞ்செய்தியும் அனுப்பப்படுவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை ஒரு வாரத்திற்குள் இணையதள இணைப்பொன்றின் ஊடாக செலுத்துமாறு கோரி, பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பெயரைப் பயன்படுத்தி வாட்ஸ்அப் அல்லது வேறு வழிகளில் போலியான குறுஞ்செய்திகள் அனுப்பப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செய்திகள் முற்றிலும் போலியானவை எனவும், அவற்றில் குறிப்பிடப்படும் இணைய இணைப்புகளைத் திறக்கவோ அல்லது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி விபரங்களை உள்ளிடவோ வேண்டாம் எனவும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் எச்சரித்துள்ளார்.

மேலும், இத்தகைய போலி குறுஞ்செய்திகள் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக பொலிஸாருக்கு அறிவிக்குமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

you may also like