- by Editor
- 2 years ago
அன்பில் மகேஸ் கைது!
-
- by Editor,
- 3 days ago
- in இந்திய செய்திகள்
தனியார் பாடசாலைகளுக்கு அங்கீகாரம் பெற்றுத் தருவதாகக் கூறி 400 கோடி இந்திய ரூபாவுக்கு மேல் மோசடி நடந்ததாகக் கூறப்படும் வழக்கில், முன் பிணை மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை தொடர்ந்து தி.மு.க. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் நேற்று மாலை கைது செய்யப்பட்டார்.
கடந்த 2021–2026 தி.மு.க. ஆட்சிக் காலத்தில், தனியார் பாடசாலைகளுக்கு நிரந்தர அங்கீகாரம், பாடசாலைகளின் தரம் உயர்த்துதல் மற்றும் டி.டி.சி.பி. அனுமதி உள்ளிட்ட பல்வேறு அரசு அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக சென்னை பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு தனியார் பாடசாலைகள் கூட்டமைப்பின் செயலாளர் இளங்கோவன் புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு தனியார் பாடசாலைகள் சங்கக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், தி.மு.க. பிரமுகருமான பி.டி.அரசகுமார் கைது செய்யப்பட்டார். அவர் 177 தனியார் பாடசாலைகளிடம் இருந்து 400 கோடி இந்திய ரூபாவுக்கு அதிகமாகப் பணம் பெற்றமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. அரசகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான 20 வங்கிக் கணக்குகளும், அன்பில் மகேஸின் நெருங்கிய நண்பரும், சங்கத்தின் மாநில பொருளாளரும், முன்னாள் சடடமன்ற உறுப்பினர்கள் முத்துகுமார் தொடர்புடைய 29 வங்கிக் கணக்குகளிலும் பணப் பரிமாற்றங்கள் நடந்தமை கண்டறியப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, அன்பில் மகேஸ் மீதும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த மாதம் 16 ஆம் திகதி சென்னை மற்றும் திருச்சியில் உள்ள அன்பில் மகேஸின் வீடுகளில் பொலிஸார் சோதனை நடத்தினர். கடந்த மாதம் 18 ஆம் திகதி சென்னை வேப்பேரியில் உள்ள பொலிஸ் ஆணையர் அலுவலகத்தில் அன்பில் மகேஸிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் முன்னாள் சடடமன்ற உறுப்பினர் முத்துகுமார் தொடர்ந்து தலைமறைவாக இருப்பதால், அவர் வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில் அனைத்து விமான நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து முன்பிணை கோரி அன்பில் மகேஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அன்பில் மகேஸ் முன் பிணை மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி வி.லட்சுமி நாராயணன் நேற்று தீர்ப்பளித்தார்.
தனது முன் பிணை தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, நேற்று மதியம் அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் வீதியில் உள்ள வழக்கறிஞர் வில்சனின் அலுவலகத்துக்குச் சென்ற அன்பில் மகேஸ், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக அவரிடம் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்த போது, சென்னை மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.